3வது முறையாக ராகுலின் சந்திப்பை தவிர்த்த சசி தரூர்; காங்கிரஸ் நிர்வாகிகள் அப்செட்
3வது முறையாக ராகுலின் சந்திப்பை தவிர்த்த சசி தரூர்; காங்கிரஸ் நிர்வாகிகள் அப்செட்
ADDED : டிச 12, 2025 01:55 PM

புதுடில்லி : பார்லி வளாகத்தில் ராகுல் தலைமையில் நடந்த காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் புறக்கணித்தது, அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்பியுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பாஜவையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாக கொண்ட சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், எஞ்சிய பார்லி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார்.
ஏற்கனவே, சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தையும், கடந்த மாதம் எஸ்ஐஆர் குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார். தற்போது, சசி தரூர் 3வது முறையாக கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஐஆர் குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர், பிரதமர் மோடி பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது பேச்சையும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இதுவும் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

