/
செய்திகள்
/
இந்தியா
/
'அவள் ஒரு தொடர்கதை' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம் 'அவள் ஒரு தொடர்கத ை ' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம்
/
'அவள் ஒரு தொடர்கதை' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம் 'அவள் ஒரு தொடர்கத ை ' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம்
'அவள் ஒரு தொடர்கதை' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம் 'அவள் ஒரு தொடர்கத ை ' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம்
'அவள் ஒரு தொடர்கதை' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம் 'அவள் ஒரு தொடர்கத ை ' மீண்டும் கவிதா காதல் கணவருக்காக வாழ்க்கை அர்ப்பணம்
ADDED : அக் 05, 2024 11:05 PM

பணக்கார குடும்பத்தில் பிறக்கும் பெண்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்யும்போது, தங்கள் குடும்பத்தினரின் கோபத்திற்கு கண்டிப்பாக ஆளாக நேரிடும். ஆனாலும் கணவரை, தங்கள் குடும்பத்திற்கு நிகராக பெரிய ஆளாக உயர்த்த வேண்டும் என்பதில், பெண்கள் குறிக்கோளாக இருப்பர். இதற்காக எத்தனை கஷ்டம் வந்தாலும், அதை தாங்கிக் கொள்வர்.
கணவர் நல்ல நிலைக்கு வந்ததும், தங்கள் குடும்பத்தினரிடம் சென்று, 'நாங்களும் உங்கள் அளவிற்கு உயர்ந்துவிட்டோம்' என சொல்லும்போது, காதல் திருமணம் செய்த பெண்களின் கண்களில், ஒரு லட்சிய வேட்கை இருக்கும். அதில் ஒருவரை பற்றி இங்கு பார்க்கலாம்.
காதல்
எப்போதும் பரபரப்பாக இருக்கும், பெங்களூரின் சிவாஜிநகர் நோவா தெருவை சேர்ந்தவர் கவிதா, 48. இவர் தனது காதல் கணவர் சீனிவாசின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற, மொபட்டில் சென்று பால் விற்று உள்ளார். வாழ்க்கையில் சாதிக்க நிறைய கஷ்டத்தை அனுபவித்துள்ளார். எதிர்நீச்சல் அடித்து வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால் எந்த கணவருக்காக, அனைத்து கஷ்டங்களையும் பட்டாரோ, அந்த கணவர் அவரை விட்டு மரணம் அடைந்தபோது, எதிர்காலம் பற்றிய யோசனை தான்.
சிவாஜிநகர் நோவா தெருவின் சேதுராமன் - வனஜா தம்பதிக்கு, கடந்த 1976ல் மகளாக பிறந்தவர் கவிதா. செல்வ, செழிப்புடன் வளர்ந்தவர். சேதுராமன் வீட்டில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. பால் வியாபாரம் செய்தார். மகளை பி.காம் படிக்க வைத்தார்.
பள்ளி படிக்கும் காலத்தில், தந்தை வழியில் உறவான சீனிவாசை, கவிதா காதலித்தார். சீனிவாஸ் குடும்பத்தினரும் பால் வியாபாரம் செய்தாலும், அதில் கிடைக்கும் பணம் வாழ்க்கையை நடத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
கடும் பாதிப்பு
வசதி இல்லாதவர் என்பதால், சீனிவாசை திருமணம் செய்ய வேண்டாம் என, கவிதாவுக்கு அவரது பெற்றோர் அறிவுரை கூறி உள்ளனர். ஆனாலும் காதலித்தவரை ஏமாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த கவிதா, 2004ல் வீட்டை விட்டு வெளியேறி, சீனிவாசை ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதனால், அவரது தந்தை உடல் நலம் கடுமையாக பாதித்தது.
ஒரு பக்கம் மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்மால் தந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்று கவிதாவுக்கு கவலை. இருதலைக் கொள்ளியாய் தவித்தார்.
பாசம்
ஆனாலும் கணவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினால், பெற்றோர் ஏற்றுக் கொள்வர் என்ற நம்பிக்கை கொண்டார். கணவருடன் இணைந்து பால் வியாபாரம் செய்ய துவங்கினார். தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து, நான்கு பால் கேன்களில் 40 லிட்டர் பாலை, மொபெட்டில் வைத்து எடுத்துச் சென்று, வசந்த்நகர், சிவாஜிநகர், எம்.ஜி.ரோட்டில் பால் ஊற்றினார்.
கடந்த 2004ல் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அக் ஷய் கண்ணன் என்று பெயர் சூட்டினர். மகன் பிறந்த கையோடு, தந்தை சேதுராமனை பார்க்க சென்றார். பெற்ற பாசத்தால் மகளை ஏற்றுக்கொண்டார்.
தாய் வீட்டு சீதனமாக நான்கு மாடுகளை மகளுக்கு கொடுத்தார். ஏற்கனவே 10 மாடுகள், தந்தை கொடுத்த 4 மாடுகள் என 14 மாடுகளை வைத்துக் கொண்டு, பால் வியாபாரத்தை விருத்தி அடைய செய்தனர். கடந்த 2009ல் இரண்டாவது மகன் பிறந்தார். அவரது பெயர் பவன்குமார்.
பாராட்டு
எம்.ஜி.ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் 50 லிட்டர் பால் ஊற்றும் வாய்ப்பு, கவிதாவுக்கு கிடைத்தது. மொபெட்டில் பால் கேனையும் வைத்துக் கொண்டு, மகன்களையும் பள்ளிக்கு மொபெட்டில் அழைத்துச் சென்றார். இதனால் கவிதாவை அனைவரும் மனமார பாராட்ட ஆரம்பித்தனர்.
பாலில் தண்ணீரை கலந்து தான் கவிதா விற்றாராம். ஆனால் பால் வாங்குவோரிடம் உண்மையை கூறியதால், அவர்களும் ஏற்றுக்கொண்டனர். கவிதாவின் நேர்மையை பாராட்டினர்.
ரத்த வாந்தி
கொஞ்சம், கொஞ்சமாக கஷ்டப்பட்டு பணத்தை சேர்ந்து, சீனிவாசும், கவிதாவும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்தனர். சிவாஜிநகரில் 420 சதுர அடியில் ஒரு இடம் வாங்கி வீடும் கட்டினர்.
சந்தோஷமாக சென்ற இவர்கள் வாழ்க்கையில், 2018ல் முதல் புயல் வீசியது. கவிதாவின் தந்தை சேதுராமன் மாரடைப்பால் இறந்தார்.
கடந்த 2019, அக்டோபர் 13ம் தேதி மீண்டும் புயல் வீசியது. சிவாஜிநகரில் இருந்து வசந்த்நகர் மொபெட்டில் பால் எடுத்துச் சென்றார் சீனிவாஸ். காங்கிரஸ் அலுவலகம் அருகே சென்றபோது, எமன் ரூபத்தில் வந்த கார், சீனிவாஸ் மொபெட்டில் மோத, துாக்கி வீசப்பட்டார்.
காதில் ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவோடு இருந்த அவர், மருத்துவமனையில் தனது வீட்டு முகவரியை சரியாக சொன்னார். ஆனால் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார்.
ஸ்கேன் செய்துபார்த்த போது, மண்டை ஓடு மூன்றாக உடைந்தது தெரிந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்தது. ஆனாலும் கோமாவுக்கு சென்றார். விபத்து நடந்து ஏழு நாட்களில் மரணம் அடைந்தார். மனைவி கவிதா ஏழு லட்சம் ரூபாய் செலவழித்தும் பயன் இல்லை. இரண்டு ஆண்டிற்குள் தன் இரண்டு கண்களான தந்தை, கணவரை இழந்தார்.
பிஞ்சு குரல்
ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டவரே, இவ்வளவு சீக்கிரம் தன்னை தவிக்க விட்டுச் சென்றுவிட்டாரே என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும், கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தார் கவிதா. அதன் வாயிலாக ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
சீனிவாஸ் இறந்தபோது, அவரது மூத்த மகனுக்கு ஓரளவு விபரம் தெரிந்தது. இரண்டாவது மகன் 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன்.
அம்மாவிடம் சென்று, ''அப்பாவுக்கு என்ன ஆச்சு... நீ ஏன் அம்மா குங்குமம் வைக்கவில்லை?'' என பிஞ்சு குரலில் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் கவிதா.
கணவர் இறந்த பின், கணவரின் குடும்பத்தினர் கைவிட, தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தம்பி கமலக்கண்ணன் ஆதரவுடன், இப்போது மகன்களை படிக்க வைக்கிறார். சீனிவாஸ் மிகவும் நல்ல மனிதர் என்று, பால் விற்க செல்லும் இடத்தில் பெயர் எடுத்தது உண்டு.
நல்லவர்களை கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொள்வார் என்று சொல்வது உண்டு. அது சீனிவாஸ் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. கணவரை இழந்து தவிக்கும் கவிதா, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார். கடவுள் தான் துணையாக இருப்பார் என்று நம்புகிறார்.
இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில், 1974ல் வெளியான திரைப்படம் 'அவள் ஒரு தொடர்கதை' இந்த கதையில் கதாநாயகி பெயர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.