ADDED : நவ 17, 2024 11:07 PM

பொதுவாக பெண்கள், தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பலர், தங்களின் அழகை பாதுகாக்க தேவையான பொருட்களை வாங்க தயங்கவே மாட்டார்கள்.
பெரும்பாலான பெண்கள், பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை அழகு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். சில பெண்களுக்கு பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என, ஆசை இருந்தாலும் பணம் இல்லை என்ற ஏக்கத்தில் இருப்பதை கேட்டிருக்கிறோம். வீட்டிலேயே அருமையான அழகு சாதனம் இருக்கும் போது, எதுக்குங்க கவலைப்படுறீங்க.
மஞ்சளுக்கு, 'தங்கமசாலா' என்ற பெயர் உண்டு. புராண காலத்தில் இருந்தே, பெண்கள் அழகை அதிகரிக்க மஞ்சளை பயன்படுத்தினர். காயங்களை ஆற்றும் மருத்துவ குணமும் இதற்கு உள்ளது. அதை பயன்படுத்த எளிய முறைகளை பார்ப்போமா...
l தினமும் ஒரு டம்ளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து குடியுங்கள். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளை தடுத்து, தங்கம் போன்று பளபளப்பாகும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கும். எனவே உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், மஞ்சள் பால் குடிப்பது, ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் நல்லது
l தினமும் குளிக்கும் போது, தவறாமல் உடலில் மஞ்சள் தேய்த்து குளியுங்கள். இதனால் சருமத்தில் உள்ள தொற்று நீங்கும். நீங்களும் குழந்தையை போன்ற மிருதுவான சருமத்தை பெறலாம். தேவையற்ற ரோமங்களை அகற்றும்
l எலுமிச்சை, தேனுடன் மஞ்சளை கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து, முகம், கை, கால்களில், உடலில் தேய்த்து சில நிமிடங்களுக்கு பின் குளித்தால், உடலின் கருப்பு நிறம் மாறுவதை நீங்களே காண்பீர்கள்
l உடலில் காயங்கள் இருந்தால், மஞ்சளை பூசுங்கள். விரைவில் காயம் ஆறுவதுடன், புதிய சருமத்தை உருவாக்கும். உணவிலும் தவறாமல், மஞ்சளை சேர்ப்பதால், அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்
- நமது நிருபர் -.