'நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர் அல்ல' ஸ்டாலின் கருத்துக்கு சிவசேனா பதில்
'நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர் அல்ல' ஸ்டாலின் கருத்துக்கு சிவசேனா பதில்
ADDED : ஜூலை 06, 2025 11:14 PM

மும்பை: “மஹாராஷ்டிராவில், துவக்கப்பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தைப் போல் ஹிந்தி மொழியையே எதிர்க்கவில்லை,” என, உத்தவ் சிவசேனா கட்சி மூத்த எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில், மும்மொழி கொள்கையின் கீழ், 1 - 5ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என, அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இதற்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. 19 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர், இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்தனர்.
பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து, மும்மொழி கொள்கை உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றது.
இதைக் கொண்டாடும் வகையில், மும்பையில் நேற்று முன்தினம், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து மாபெரும் கூட்டத்தை நடத்தினர். 19 ஆண்டுகளுக்கு பின், இருவரும் ஒரே மேடையில் தோன்றியதை பார்த்து, அவர்களின் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் கடந்து, மஹாராஷ்டிராவில் சூறாவளியாக சுழன்றடிக்கிறது.
'மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, பா.ஜ., இரண்டாவது முறையாக பின்வாங்கியுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மும்பையில் நேற்று கூறியதாவது:
துவக்கப் பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை மட்டுமே உத்தவ் - ராஜ் தாக்கரே எதிர்க்கின்றனர். அவர்கள் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை.
ஹிந்தி தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கும், எங்களின் நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
போராட்டம்
தமிழகத்தில் ஹிந்தி பேச மாட்டார்கள்; யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால், எங்களின் நிலைப்பாடு அதுவல்ல. நாங்கள் ஹிந்தி பேசுகிறோம்; ஹிந்தி திரைப்படங்களை பார்க்கிறோம்; இசையை கேட்கிறோம்.
மேலும், மற்றவர்கள் ஹிந்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் தடுத்தது கிடையாது. துவக்கப் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்காகத் தான் இந்த போராட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.