சிவகுமார் நீங்கள் முதல்வர் ஆவது எப்போது? அசோக் கேள்வியால் சட்டசபையில் சிரிப்பலை!
சிவகுமார் நீங்கள் முதல்வர் ஆவது எப்போது? அசோக் கேள்வியால் சட்டசபையில் சிரிப்பலை!
ADDED : டிச 13, 2024 05:10 AM
பெலகாவி: கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியதும், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவு என்னை துக்கப்படுத்தவில்லை; மாறாக மகிழ்ச்சி அளிதது உள்ளது. ஒரு மனிதன் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காண்பித்து சென்று உள்ளார். எங்கள் உறவு அரசியலுக்கு மட்டும் ஆனது இல்லை. தனிப்பட்ட உறவு.
ஆனால் அவருக்கும், எனக்கும் ஓரிரு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது பற்றி இங்கு பேச மாட்டேன். எஸ்.எம்.கிருஷ்ணா, 1996 முதல் 1999 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார்.
அப்போது நான் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். கிருஷ்ணாவுக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் கொடுக்க வேண்டும் என்று, நானும், அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா உள்ளிட்டோரும் கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தோம்.
பிடிவாதம்
கடந்த 1999ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கிருஷ்ணா முதல்வர் ஆனார். நான் அப்போது 3வது முறை சாத்தனுாரில் இருந்து வெற்றி பெற்று இருந்தேன். அமைச்சரவை பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பினோம்.
ஆனால் அந்த பட்டியலில் எனது பெயர் இல்லை. வெறும் 9 பேருக்கு மட்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. எனது ஜோதிடருக்கு போன் செய்து பேசினேன். இப்போது நீங்கள் அமைச்சராகவில்லை என்றால், எப்போதும் ஆக முடியாது என்று கூறினார்.
இதனால் நானும், ஜெயசந்திராவும் கிருஷ்ணா வீட்டிற்கு சென்று, எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டோம்.
கிருஷ்ணா என்னிடம் கூறும் போது, எனது ஜோதிடரிடம் கேட்டேன். உனக்கு (சிவகுமாருக்கு)இப்போது அமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
ஆனாலும் நான் விடவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி அமைச்சர் பதவி கிடைத்தது.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''முதல்வர் பதவி ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் என்று, ஒப்பந்தம் செய்து உள்ளீர்கள்.
''அமைச்சர் பதவியை அடம்பிடித்து வாங்கியது போல, முதல்வர் நாற்காலியை அடம் பிடித்து வாங்குவது எப்போது; நீங்கள் எப்போது முதல்வர் ஆவீர்கள்.
''ஜனவரிக்குள் நீங்கள் முதல்வராக விட்டால், இனி எப்போதும் ஆக முடியாது என்று, உங்களிடம் ஜோதிடர் கூறி உள்ளார். எனக்கும் அதுபற்றி தகவல் கிடைத்தது. இதனால் இனி நீங்கள் முதல்வர் பதவிக்காக முட்டி மோதுவதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.
யார் பக்கம்?
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பிரியங்க் கார்கே, ''உங்கள் கட்சி மூன்றாக உடைந்து உள்ளது. உங்கள் கட்சி பெயர் பி.ஜே.பி.,யா அல்லது ஒய்.ஜே.பி.,யா என்று கேட்டார்.
மீண்டும் பேசிய அசோக், ''பிரியங்க் கார்கே நீங்கள் இப்போது குழப்பத்தில் உள்ளீர்கள். நீங்கள் யார் பக்கம், சித்தராமையா பக்கமா, சிவகுமார் பக்கமா,'' என்று கேட்டார்.
பின், சிவகுமாரை பார்த்து, ''உங்கள் இருவருக்குமான முதல்வர் சண்டையில், மூன்றாவது நபருக்கு லாபம் ஏற்பட்டு விட கூடாது. முதல்வர் பதவிக்காக எஸ்.ஆர்.பொம்மை, தேவகவுடா சண்டை போட்ட போது, ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வர் ஆனார்.
''உங்கள் இருவருக்குமான சண்டையில், பிரியங்க் கார்கே முதல்வர் ஆகி விட போகிறார். எதற்கும் உஷாராக இருங்கள்,'' என்று கூறியதும், அவையில் சிரிப்பலை எழுந்தது.
இந்த நேரத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் காதர், ''முதல்வர் பதவி விவகாரம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை, உங்கள் அறைக்கு அழைத்து சென்று பேசுங்கள்,'' என்று, துணை முதல்வர் சிவகுமாரிடம் கூறினார்.
இதையடுத்து, கூட்டம் தொடர்ந்து நடந்தது.