பிரபல நிறுவனங்களின் மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு; ஆய்வக முடிவுகளில் அதிர்ச்சி தகவல்
பிரபல நிறுவனங்களின் மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு; ஆய்வக முடிவுகளில் அதிர்ச்சி தகவல்
ADDED : நவ 19, 2025 03:15 AM

கோவை: தமிழகத்தில் தயாராகும் இரண்டு பிரபல மசாலா பொடி தயாரிப்பு நிறுவனங்களின் மிளகாய் மற்றும் மஞ்சள் பொடிகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு இருப்பது, ஆய்வக அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
ரசம், சாம்பார், துவங்கி அனைத்து உணவுகளிலும் மஞ்சள், மிளகாய் பொடி சேர்க்கப்படுகிறது. மிளகாய் பொடியில், 'காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட் ராக்சைடு, காப்பர் சல்பேட், குப்ரஸ் ஆக்சைடு' ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 'குளோரான்ட்ரானிலிப்ரோல், சைபர்மெத்ரின், டினோட்பரன், ஹெக்ஸிதியாசாக்ஸ், இமிடாக்ளோப்ரிட்' போன்ற பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
பொதுவாக கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் பொடியில், 'சைபர்மெத்ரின், தியாமெதோக்சம்' போன்ற பூச்சிக் கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கலந்து இருப்பது ஆய்வக முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக முடிவுகளின் படி, பிரபல நிறுவனங்களில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உணவு பாதுகாப்பு தரநிலைக்கு தகுதியானவை இல்லை என, முடிவுகள் வந்துள்ளன.
இப்பொடிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு வரலாம். தவிர, கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு மிகவும் அபாயகரமானது. குழந்தைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், புற்றுநோய் பாதிப்பு வரலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கோவை மளிகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், 'ஆறு மாதங்களாக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மாதிரிகள் கொடுத்து ஆய்வு செய்து பார்த்த போது, பூச்சிக்கொல்லி கலப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ஆய்வக அறிக்கையுடன், புகார் மனு சமர்ப்பிக்கவுள்ளோம்' என்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''பிரபல நிறுவனங்களின் உணவு மாதிரிகளை மாவட்ட பாதுகாப்புத்துறை சார்பிலும் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வக முடிவுகள் வந்த பின் உணவு பாதுகாப்பு தரநிலைச்சட்ட விதிமுறைகளின் படி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பிரபல நிறுவனங்கள் காலாவதி தேதியை அதிகரிக்கவும், பூச்சி வராமலும், கட்டி ஆகாமலும் இருக்க இதுபோன்ற தவறை செய்கின்றனர். 50 கிராம் மசாலா பொடி பாக்கெட்டிற்கு எதற்க்கு, 10 மாத காலாவதி தேதி என மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.

