ADDED : டிச 05, 2024 01:13 AM

பெங்களூரு, கர்நாடகாவில், முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் பகிரங்கப்படுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், மாநில தலைவர் சிவகுமார் தலைமையின் கீழ், 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
உடனே டில்லி பறந்த சிவகுமார், முதல்வர் பதவி கேட்டார். ஆனால், மூத்த அரசியல்வாதியான சித்தராமையா, தன் செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் ஆனார். சிவகுமார், துணை முதல்வர் ஆக்கப்பட்டார்.
அப்போது, 'ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்து அதிகாரபூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சிவகுமார் நேற்று கூறுகையில், “சித்தராமையா எங்கள் தலைவர், எங்களது முதல்வர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் ஒப்பந்தம் உள்ளது. அதை உங்களிடம் பகிரங்கப்படுத்த முடியாது.
''நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அவர் கூறுவதை நான் கேட்கிறேன். நான் சொல்லும் விஷயங்களை அவரும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார். கட்சிக்காக உழைப்பது என் பலம். பதவி வேண்டும் என மேலிடத்தை மிரட்டாமல் இருப்பது, என் பலவீனம்,” என்றார்.
சிவகுமாரின் இந்த கருத்தின் மூலம் முதல்வர் மாற்றம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாண்டியாவில் சித்தராமையா நேற்று கூறுகையில், “முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக, சிவகுமாருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை,” என்றார்.