ADDED : பிப் 03, 2025 04:55 AM

கொப்பால்; அங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சியில், எழுத்து பலகையில் கன்னடம் எழுத தெரியாமல், அமைச்சர் சிவராஜ் தங்கடகி தவித்த வீடியோ பரவி வருகிறது.
கொப்பால் மாவட்டம், காரடகியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் நேற்று திறக்கப்பட்டது. கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சரும், கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சிவராஜ் தங்கடகி கலந்து கொண்டார்.
அங்கன்வாடி மையத்தில் இருந்த எழுத்து பலகையில், எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும் என்ற வார்த்தையை, கன்னடத்தில் எழுத அமைச்சர் முயன்றார்.
ஆனால், அவர் எழுத்துகளை மறந்து எப்படி எழுதுவது என்று தெரியாமல் தவித்தார். பக்கத்தில் நின்ற அதிகாரிகள் அவருக்கு உதவி செய்தனர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
வீடியோ வேகமாக பரவிய நிலையில், 'கன்னட துறை அமைச்சருக்கே கன்னடம் எழுத தெரியவில்லை. இனி கன்னடத்தின் நிலை அவ்வளவு தான். இவர்கள் தான் கன்னடத்தை காப்பாற்ற புறப்பட்டு இருப்பவர்களா' என்று, பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளிக்கல்வி அமைச்சர் மதுபங்காரப்பாவுக்கு கன்னடம் எழுத, படிக்க தெரியாது என்ற ஒரு பேச்சு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுடன் மது பங்காரப்பா உரையாடிய போது, அமைச்சருக்கு கன்னடம் தெரியாது என்று ஒரு மாணவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

