துங்கபத்ரா அணை தண்ணீர் பச்சையாக மாறியதால் அதிர்ச்சி
துங்கபத்ரா அணை தண்ணீர் பச்சையாக மாறியதால் அதிர்ச்சி
ADDED : ஏப் 11, 2025 06:41 AM

விஜயநகரா: பல்லாரி மாவட்டத்தின் முக்கிய அணையான துங்கபத்ரா அணை நீர் முற்றிலும் பச்சை நிறமாக மாறியுள்ளதால், மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில், துங்கபத்ரா அணை உள்ளது.
இந்த அணை விஜயநகரா, பல்லாரி உட்பட எட்டு மாவட்டங்களின் மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது. விவசாயத்துக்கும் உயிர் நாடியாக உள்ளது. கடந்தாண்டு அணையின் ஷட்டர் உடைந்ததில், பெருமளவு தண்ணீர் வெளியேறியது. அதன்பின் ஷட்டர் பழுது பார்க்கப்பட்டது. அணையின் மற்ற ஷட்டர்கள் பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், துங்கபத்ரா அணையின் தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. அணையின் நீர் பல ஆண்டுகளாகவே அசுத்தமாக இருந்து வருகிறது.
குடிக்க தகுதியானது அல்ல என, இதற்கு முன் பல முறை ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. ஆனால், இப்போது தண்ணீர் முழுதுமாக, பச்சை நிறமாக மாறியுள்ளது. அசுத்தமடைந்த நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதால், மீன்கள் இறந்து நீரில் மிதக்கின்றன.
'துங்கபத்ரா அணை நீர் அசுத்தமடையவும், பச்சை நிறமாக மாறவும் சுற்றுப்பகுதி தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதே காரணம்' என, தகவல் வெளியாகியுள்ளது. இதை கட்டுப்படுத்தும்படி மக்கள் வலியுறுத்துகின்றனர்.