கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடல் 'ஆன்லைனு'க்கு மாறிய வியாபாரிகள்
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடல் 'ஆன்லைனு'க்கு மாறிய வியாபாரிகள்
ADDED : நவ 14, 2025 12:34 AM
செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்களின் தேவையை 'ஆன்லைனி'ல் பெற்று, வணிகர்கள் வீட்டுக்கே 'டெலிவரி' செய்யத் துவங்கியுள்ளனர்.
டில்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை இரவு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தேசிய தலைநகர் மட்டுமில்லாமல், நாடு முழுதும் பதற்றம் நிலவுகிறது.
இயல்பு வாழ்க்கை பயங்கரவாதிகளின் பெரும் சதித்திட்டம் அம்பலமாகி உள்ளது. டில்லியை பொருத்தவரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சதார் பஜார், சாந்தினி சவுக் உள்ளிட்ட மொத்த வர்த்தக மையங்களில் வெகுவாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கடைகள் நேற்றும் மூடப்பட்டிருந்தன. பரபரப்பாக இயங்கும் சந்தைகள் மூடிக்கிடந்தன. ஒரு சிலரே கடையை திறந்திருந்தனர். மக்கள் பீதியுடன் நடமாடுவதை மஹிபால்பூரில் உள்ள ராடிசன் அருகே நேற்று காலை பஸ் டயர் வெடித்த சம்பவமும் உறுதிப்படுத்தியது.
கடைகளை தேடி வரும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தையும் விட குறைந்திருந்ததாக நேற்று சதார் பஜார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பரம்ஜீத் சிங் பம்மா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “தங்களுக்கு தேவையான பொருட்களை வாடிக்கையாளர்கள் போனில் கூறுகின்றனர். அதை நாங்கள் அவர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்ய துவங்கியுள்ளோம். இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இது தொடரும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
அச்சம் சாந்தினி சவுக் அருகே மின்னணுப் பொருட்களுக்கு பெயர் பெற்ற லஜ்பத் ராய் சந்தை, கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டுள்ளது. எப்போதுமே வாடிக்கையாளர்களாலும் சுமை துாக்குபவர்களாலும் பரபரப்பாக காணப்படும் அதன் குறுகிய பாதைகள் இப்போது காலியாக கிடக்கின்றன.
அங்கு கடை வைத்துள்ள சுபாஷ் ராய் என்பவர், “எங்கள் கடை கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளது. நேற்று சந்தை நிலவரத்தை பார்க்க வந்தேன். யாரும் கடையை திறக்கவில்லை.
''கடையை சரிபார்த்துவிட்டு எல்லோரும் சென்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் எங்கள் வாழ்வாதாரத்தை பாதித்தது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
இருப்பினும், சரோஜினி நகர் உள்ளிட்ட சில சந்தைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. அங்கு வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்ததை காண முடிந்தது.
சரோஜினி நகர் சந்தை சங்கத்தின் தலைவர் குல்தீப் சிங், “செவ்வாய்க்கிழமை சிறிது அமைதி நிலவியது. ஆனால் புதன்கிழமை சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அன்று மாலையிலும் நல்ல கூட்டம்,” என்றார்.
ஒரு மாதம் ஆகலாம்! எங்கள் பகுதியில் வியாபாரம் முற்றிலுமாக மந்தமாகிவிட்டது. ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே சந்தைக்கு வந்தனர். வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் இன்னும் பீதியுடனே இருக்கின்றனர். சாதாரண நிலைக்குத் திரும்ப குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். பல வாடிக்கையாளர்கள் வரத் தயங்குகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் கடைகளைக் கொண்ட சில கடைக்காரர்கள் இன்னும் தங்கள் கடைகளைத் திறக்க பயப்படுகின்றனர். -சஞ்சய் பார்கவ், தலைவர், சாந்தினி சவுக் வர்த்தகர்கள் சங்கம்

