கர்நாடகா அரசு பள்ளிகளில் 17,258 வகுப்பறை பற்றாக்குறை
கர்நாடகா அரசு பள்ளிகளில் 17,258 வகுப்பறை பற்றாக்குறை
ADDED : ஜன 01, 2024 06:30 AM

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பல அரசு தொடக்கம், உயர் நிலைப்பள்ளிகளில், 17,258 பள்ளி அறைகள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் பள்ளி வளாகம், கிராம சமுதாய கூடம், மரத்தடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கர்நாடகாவில், 48,285 அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சில பள்ளிகளில் அறைகள் கட்டப்பட்டும், இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் மைதானத்திலும், மரத்தடியிலும், கிராமத்தின் சமுதாய கூட்டத்திலும் பாடம் கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
சில பள்ளிகளில் வகுப்பறைகளில் பள்ளி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பழமையான பள்ளி கட்டடங்கள் பாழடைந்துள்ளன. மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே வகுப்பறையில் 2, 3ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 48,285 பள்ளிகளில் 17,258 வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ளது. சித்ரதுர்காவில் 1,664; விஜயநகரில் 1,159; தாவணகெரேயில் 1,160; விஜயபுராவில் 1,144; பெலகாவியில் 1,089; கலபுரகியில் 1,025; ராய்ச்சூரில் 1,023 ஆகிய மாவட்டங்களில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக அதிகமாக உள்ளது.
பள்ளி கல்வி எழுத்தறிவு துறை அமைச்சர் மதுபங்காரப்பா கூறியதாவது,
அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் பிரச்னை இருப்பது கவனிக்கப்பட்டது. நடப்பாண்டு 7,098 பள்ளிகளுக்கு, 9,604 வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தார்வாட் பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் கவுடிமத் கூறுகையில், ''தார்வாட் மாவட்டத்தில் 295 அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது'' என்றார்..