அரசு மருத்துவமனைகளில் 250 மருந்துகள் பற்றாக்குறை!: சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனைகளில் 250 மருந்துகள் பற்றாக்குறை!: சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி
ADDED : நவ 19, 2024 06:39 AM

பெங்களூரு: கர்நாடக அரசு மருத்துவமனைகளில், 250 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏழைகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள், மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். சில மாதங்களாக மழை பெய்ததால், வானிலை மாறியுள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவில், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா என, பல்வேறு நோய்கள் அதிகரிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மினரல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், மருந்துகள் வாங்க ஆண்டு தோறும், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது. பிராண்டெட் கிளாத், காட்டன், சர்ஜிகல் கிளவுஸ், குளுக்கோஸ் பாட்டில் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்குகிறது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடக மினரல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், மருந்துகள் வாங்கும் டெண்டர் முடிவு செய்வதில், மருந்துகள் சப்ளை செய்ய உத்தரவு கடிதம் கொடுப்பதில் தாமதம் செய்கிறது.
இதன் விளைவாக ஏழை நோயாளிகள் பாதிப்படைகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 250 மருந்துகள் பற்றாக்குறை உள்ளன.
சுவாசப்பை பிரச்னை, நிமோனியா, ரத்தசோகை, ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, கண் வலி உட்பட, கடுமையான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளே இருப்பில்லை.
அரசு மருந்துகள் சேகரிப்பு மையங்களில், மருந்துகள் காலியாகி விட்டன. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாததால், நோயாளிகள் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.
மருந்துகள் வினியோகிக்க ஆண்டு தோறும் கே.எஸ்.எம்.எல்., டெண்டர் அழைக்கும். டெண்டர் முடிவு செய்து, உத்தரவு கடிதம் கொடுத்த பின், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மருந்துகளை வினியோகிக்கும்.
டெண்டர் முடிந்தும் மருந்துகள் வினியோகிக்க, உத்தரவு கடிதம் கொடுக்காததால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மருந்துகள் வினியோகிக்காமல், தாமதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று அளித்த பேட்டி:
மாநிலத்தின் ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை.
தேவையான அளவில் இருப்புள்ளது. டெண்டர் தாமதமாக, சில தொழில்நுட்ப பிரச்னைகளே காரணம். பற்றாக்குறை உள்ள மருந்துகளை உடனடியாக வாங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளோம்.
எங்கள் அரசு வந்த ஆரம்பத்தில், ஆரம்ப சுகாதார மையங்களில் 40 சதவீதம் மருந்துகள் மட்டுமே இருந்தன. சுகாதார மையங்களுக்கு தேவையான மருந்துகளை, அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொண்டன. எங்கள் அரசு வந்த பின், சுகாதார மையங்களுக்கும், கர்நாடக மருந்துகள் கார்ப்பரேஷன் மூலமாக வினியோகிக்க, நடவடிக்கை எடுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.