மைசூரில் நாற்று நடுவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை
மைசூரில் நாற்று நடுவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 28, 2024 07:23 AM
மைசூரு : மைசூரு மாவட்டத்தின், அனைத்து இடங்களிலும் பயிரிடும் பணிகள் சூடு பிடித்துள்ளது. ஆனால் நாற்று நடும் பணிக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல், வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.
இம்முறை மைசூரு மாவட்டத்தில், பரவலாக நல்ல மழை பெய்தது. விவசாயிகளும் குஷியுடன் நாற்று விடும் பணியை துவக்கி உள்ளனர். ஆனால் நாற்று நடுவதற்கு, கூலியாட்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். வெளி மாநிலங்களின் தொழிலாளர்களை நாடுகின்றனர்.
மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்கள், பல்லாரி, சிந்தனுார் பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். இதற்கு முன் தாவணகெரேவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அம்மாவட்ட விவசாயிகள், வட மாநிலங்களில் இருந்து கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து, நாற்று நடும் பணியை செய்தனர்.
இப்போது மைசூரிலும், அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. மைசூரின் கபினி, ராமசாமி, மாதவமந்த்ரி கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. நாற்று நட இது சரியான நேரமாகும்.
மாதவமந்த்ரி கால்வாய் பகுதியில் 6,000 ஏக்கர்; ராமசாமி, கபினி கால்வாய் பகுதிகளில் 12,000 ஏக்கர் பகுதிகளில் நாற்று நடும் பணிகள் நடக்கின்றன. நியாயமான கூலி கிடைப்பதால், கூலி தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிக்கு வருகின்றனர்.