முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவது அவதூறு ஆகாது: கேரள ஐகோர்ட் அதிரடி
முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவது அவதூறு ஆகாது: கேரள ஐகோர்ட் அதிரடி
UPDATED : நவ 21, 2024 10:19 PM
ADDED : நவ 21, 2024 10:05 PM

திருவனந்தபுரம்: கறுப்புக் கொடி காட்டுவது சட்ட விரோதம் அல்ல. அது அவதூறு ஆகாது என கேரள ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் பகுதியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதாக 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அவதூறு , மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பரவூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த ஐகோர்ட் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒருவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது அவதூறு கிடையாது. சட்ட விரோதமும் இல்லை. முதல்வரின் கான்வாய்க்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினாலும், அதனை அவதூறாக கருத முடியாது. ஒரு குறிப்பிட்ட நிறத்தில் கொடி காட்டப்பட்டாலும், அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டாலும் கொடியை காட்டுவதற்கு தடை செய்ய சட்டத்தில் இடமில்லை. அதனால், அத்தகைய நடவடிக்கை அவதூறு குற்றமாக கருத முடியாது. இவ்வாறு ஐகோர்ட் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.