ADDED : அக் 28, 2025 09:47 AM

புதுடில்லி: ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை அலெக்ஸ் கேரி துாக்கி அடிக்க, நீண்ட துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று அற்புதமாக பிடித்தார் இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 30. அப்போது தடுமாறி விழுந்ததில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனே சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ரத்தக்கசிவு காணப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) அனுமதிக்கப்பட்டார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார்.
குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார். இன்னும் சில நாட்கள் ஷ்ரேயஸ் ஐயர் கண்காணிப்பில் இருப்பார். தற்போது எந்த ஆபத்தும் இல்லை.
கடந்த இரண்டு நாட்களாக நான் அவருடன் பேசி வருகிறேன். அவர் நன்றாக பதில் அளிக்கிறார். மருத்துவர்கள் அவருடன் இருக்கிறார்கள். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் குணம் அடைந்து வருவது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

