அமெரிக்கா மிரட்டல் எதிரொலி; நவம்பரில் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி
அமெரிக்கா மிரட்டல் எதிரொலி; நவம்பரில் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி
ADDED : டிச 12, 2025 11:27 AM

மாஸ்கோ: அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்ந்து வருகிறது. பிற நாடுகளைக் காட்டிலும், விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ய உலக நாடுகள் போட்டி போட்டு வந்தன. ஆனால், உக்ரைன் போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். மேலும், பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, நாளொன்றுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் குறைந்து, 69 லட்சம் பீப்பாய்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய் வருவாய், நவம்பர் மாதத்தில் 99 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 32 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும்.
வரிவிதிப்புகள், தடைகள் போன்ற அமெரிக்காவின் மிரட்டல்களால் ரஷ்யா எண்ணெய் கொள்முதலில் பிற நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய நிதியமைச்சகம் கூறுகையில், 'இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 22 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 88 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது,' என தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போர் துவங்கிய பிறகு, ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையில் மிகப்பெரிய அடி விழுந்தது இதுவே முதல்முறையாகும்.

