ADDED : செப் 30, 2024 10:46 PM

மைசூரு : மைசூரில் நடந்த 'ரேவ் பார்ட்டி' வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மைசூரு ரூரல் மீனாட்சிபுரா கிராமத்தில் கே.ஆர்.எஸ்., அணையின் நீர்த்தேக்கப் பகுதி உள்ளது. இங்கு கடந்த மாதம் 28ம் தேதி இரவு 'ரேவ் பார்ட்டி' நடந்தது. இது பற்றி மைசூரு எஸ்.பி., விஷ்ணுவர்த்தனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., நாகேஷ், இளவாலா போலீஸ் நிலைய எஸ்.ஐ., மஞ்சுநாத் நாயக் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அதிகாலையில் பார்ட்டி நடந்த இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும், பார்ட்டியில் ஈடுபட்ட வாலிபர்கள், இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.
அவர்களை பிடிக்க முயன்றபோது, வாலிபர்கள் சிலர் எஸ்.ஐ., மஞ்சுநாத் நாயக்கை தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்ட்டியில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பார்ட்டி நடந்த இடத்தில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் கைதானவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ரேவ் பார்ட்டி நடப்பது பற்றி முன்கூட்டியே தகவல் கிடைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எஸ்.ஐ., மஞ்சுநாத் நாயக் பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரிந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் நேற்று உத்தரவிட்டார்.