ADDED : அக் 25, 2024 07:43 AM
பெங்களூரு: 'முடா' வழக்கில் ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி, இரண்டு நீதிபதிகள் அமர்வில், முதல்வர் சித்தராமையா மேல்முறையீடு செய்து உள்ளார்.
'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள், சட்டவிரோதமாக வாங்கி கொடுத்ததாக, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், 'முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய, கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். கடந்த செப்டம்பர் 24ம் தேதி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மூன்று மாதத்திற்குள் விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், லோக் ஆயுக்தாவிற்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில், சித்தராமையா தரப்பில் அவரது வக்கீல் சதாபிஷ் சிவண்ணா நேற்று மேல்முறையீடு செய்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.