ADDED : செப் 30, 2024 12:26 AM
மைசூரு : ''கல்வி அறிவு பெற்றவர்கள் முதலில் ஜாதியை ஒழிக்க வேண்டும். அறிவியலையும், பகுத்தறிவையும் வளர்த்து கொள்ளுங்கள்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு நகரில் நேற்று பி.சி.எம்., விடுதி மாணவர் சங்கம் திறப்பு விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நான் சட்டம் படிக்க, என் தந்தை அனுமதிக்கவில்லை. 'சட்டக்கல்லுாரியில் சேர்க்கா விட்டால், என் சொத்தில் ஒரு பங்கை கொடுங்கள்' என கேட்டேன். அதன் பின்னரே அனுமதித்தார்.
நான் சட்டம் படிக்கவில்லை என்றால், இன்று முதல்வராகி இருக்கமாட்டேன். கல்வி அறிவு பெற்றவர்கள் முதலில் ஜாதியை ஒழிக்க வேண்டும். அறிவியலையும், பகுத்தறிவையும் வளர்த்து கொள்ளுங்கள்.
எந்த மதமும், கடவுளும் கர்மாவின் கோட்பாட்டை ஆதரிக்கவில்லை. ஒரு மனிதனுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவன் நல்ல கல்வியை பெற்று, நல்ல வாழ்க்கையை வாழ்வான்.
நான் படிக்கும் போது, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. அதனால் எம்.பி.பி.எஸ்., சீட், எம்.எஸ்.சி., சீட் கிடைக்கவில்லை. படிப்பு முடித்ததும், சீட் கிடைக்காமல், விவசாயத்தில் ஈடுபட்டேன்.
இவ்வாறு பேசினார்.

