ADDED : நவ 09, 2024 11:05 PM
மைசூரு: 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் 50:50 திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, நிலம் கொடுத்தவர்களுக்கு 50:50 திட்டத்தின் கீழ் வீட்டுமனைகள் வழங்கியது தெரிய வந்துள்ளது.
'முடா' சார்பில், லே- - அவுட்டுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மாற்று வீட்டு மனைகள் கொடுப்பது வழக்கம்.
வீட்டு மனைகள் வழங்கியதில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்; அமலாக்கத்துறையினரும் விசாரிக்கின்றனர்.
பா.ஜ., ஆட்சியின்போது 50:50 திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. 2009க்கு முன்பு, முடாவுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 50:50 திட்டத்தின் கீழ் நிலம் கொடுக்க வேண்டாம் என அரசு கூறியிருந்தது.
ஆனால் 2009க்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கும் கூட 50:50 வீட்டுமனைகள் ஒதுக்கியது தற்போது தெரியவந்துள்ளது.
முடா நேற்று வெளியிட்ட முதல் பட்டியலில் 50:50 திட்டத்தின் கீழ் 300 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடா கமிஷனர்களாக இருந்த நடேஷ், தினேஷ்குமார் ஆகியோர் தங்களது இஷ்டத்திற்கு வீட்டு மனைகள் ஒதுக்கியது தெரிய வந்துள்ளது.
கடந்த 1962ல் அப்துல் வாஜித் என்பவரின், நிலத்தை முடா கைப்பற்றி இருந்தது. அதற்கு மாற்றாக, அவருக்கு 26 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
முகமது யூசுப் என்பவருக்கு 21; மல்லப்பாவுக்கு 19; வெங்கடப்பாவுக்கு 17; தேவம்மாவுக்கு 16; மகாதேவ், கீதா ஆகியோருக்கு தலா 12, சுரேஷ் என்பவருக்கு 11; வைரமுடி 10; சவுடய்யா என்பவருக்கு 7 வீட்டு மனைகள் ஒதுக்கியது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும், மக்கள் பிரதிநிதிகள் தான், சிபாரிசு கடிதம் கொடுத்தது என்பதும் தெரியவந்துள்ளது. சிலர் காங்கிரஸ் பிரமுகர்கள் வாயிலாக சிபாரிசு கடிதம் பெற்றதாக கூறப்படுவதால், முதல்வர் சித்தராமையாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது.