ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு அரை மணி நேரம் ஆலோசனை
ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு அரை மணி நேரம் ஆலோசனை
ADDED : ஏப் 04, 2025 06:45 AM

டில்லி சென்று உள்ள முதல்வர் சித்தராமையா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை நேற்று சந்தித்து பேசினார். இருவரும் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்ற விவகாரம், விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மூன்று நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் டில்லி சென்றார். நேற்று காலை 10:30 மணிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, டில்லியில் உள்ள அவரது வீட்டில் சித்தராமையா சந்தித்தார்.
இருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது ராஜண்ணா ஹனி டிராப் விவகாரம்; அமைச்சரவை மாற்றம் உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். 'தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் வேண்டாம். மே மாதத்திற்கு பின் பார்த்து கொள்ளலாம்' என்று சித்தராமையாவிடம், ராகுல் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
ராகுலை சந்தித்து பேசிய போது, தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியை பற்றி விவாதித்தேன்.
நம் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள அமேசான், ஓலா, ஊபர், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக, அவர்கள் சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து 5 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்படும்.
இதுபோன்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல வாரியம் அமைக்க முடிவு செய்து உள்ளோம். நியாயமான ஊதியம், பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான சட்டம் கொண்டு வருவோம்; சமமான எதிர்காலத்தை உருவாக்குவதில் கர்நாடகா முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்
. - நமது நிருபர் -

