சித்தராமையா பதவி பறிப்பு? அமைச்சர் சதீஷ் 'சஸ்பென்ஸ்!'
சித்தராமையா பதவி பறிப்பு? அமைச்சர் சதீஷ் 'சஸ்பென்ஸ்!'
ADDED : அக் 09, 2024 05:24 AM

பெங்களூரு, : முதல்வர் சித்தராமையாவின் பதவி தொடர்பாக, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, 'சஸ்பென்ஸ்' வைத்து உள்ளார்.
'முடா' வழக்கில் சிக்கி உள்ளதால், முதல்வர் சித்தராமையா பதவி விலகுவார் என்று கூறப்படும் நிலையில், பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி திடீரென டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசினார். முதல்வர் பதவிக்கு அவர் துண்டு போகிறார் என்று பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் சந்தித்து பேசினர். இதனால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருக்கு, சதீஷ் நேற்று திடீரென சென்றார். சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ரவிசங்கர், அனில் சிக்கமாது, ஹரிஷ் கவுடா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இவர்கள் அனைவரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்கள். முதல்வர் பதவியை பிடிக்க, வடமாவட்டத்தில் இருந்து தென்மாவட்டம் வரை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு திரட்டுகிறார் என்ற பேச்சு எழுந்தது.
இதுகுறித்து சதீஷ் கூறுகையில், ''முதல்வர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. சித்தராமையா எங்கள் தலைவர். அவரே முதல்வராக நீடிப்பார். ஆனால் மூன்று ஆண்டுகளா அல்லது ஐந்து ஆண்டுகளாக என தெரியவில்லை. அதுபற்றி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
''தற்போது முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு எழவில்லை. எனது ஆதரவாளர்கள் நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். அதில் தவறு இல்லை. நானும், பரமேஸ்வரும் சந்தித்தோம். காபி குடித்தோம். நாங்கள் காபி குடித்துவிட்டு விவாதித்தால், முதல்வர் மாற்றம் நடக்குமா. ஒரே கட்சியின் தலைவர்கள் சந்தித்து பேசினால் குற்றமா,'' என்றார்.