சித்தராமையா ஆதரவாளர்கள் 'டூர்' :து.முதல்வர் ஆதரவாளர்கள் கடுப்பு
சித்தராமையா ஆதரவாளர்கள் 'டூர்' :து.முதல்வர் ஆதரவாளர்கள் கடுப்பு
ADDED : பிப் 19, 2026 01:21 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளதால், துணை முதல்வர் சிவகுமார் தரப்பு கடுப்பில் உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்காக, சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையிலான மோதல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல், காங்கிரஸ் மேலிடமும் திணறுகிறது.
இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் ஏற்பாட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 35 பேர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
'பதவியை தக்கவைத்து கொள்ள தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, சித்தராமையா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்' என்று பேச்சு அடிபட்டது. ஆனால், இதை முதல்வர் மறுத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள் என, 10 பேர் பெங்களூரில் இருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்து விட்டு நியூசிலாந்து செல்கின்றனர். மார்ச் 1ம் தேதி பெங்களூரு வர உள்ளனர்.
இது தவிர, தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனும், தன் மனைவி மற்றும் உறவினர்கள் ஏழு பேருடன், தாய்லாந்தின் புக்கட் தீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்து, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு செல்ல உள்ளார். இவரும், சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு சென்றுள்ள அனைவரும், சித்தராமையா ஆதரவாளர்கள் என்பதால் சிவகுமார் தரப்பு கடுப்பாகி உள்ளது.

