வீட்டு மனைகளை ஒப்படைப்பதாக சித்தராமையா மனைவி கடிதம்
வீட்டு மனைகளை ஒப்படைப்பதாக சித்தராமையா மனைவி கடிதம்
ADDED : அக் 01, 2024 05:28 AM

பெங்களூரு: 'எனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என, 'முடா'வுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் நேற்றிரவு வெளியானது.
முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத் துறையும் நேற்று வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் சித்தராமையாவை, பெங்களூரு காவிரி இல்லத்தில் மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில், முடாவுக்கு, சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது.
அந்த கடிதத்தில், 'நீங்கள் வழங்கிய 14 வீட்டு மனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என, அவர் கூறியுள்ளார்.
வழக்குக்கு பயந்து முடாவுக்கு கடிதம் எழுதும்படி, மனைவி பார்வதிக்கு சித்தராமையா கூறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சித்தராமையா மீது அளித்த புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு, லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு அவர் ஆஜராகிறார்.