ஹாசனில் சித்து ஆதரவாளர்கள் மாநாடு சிவகுமார் தலைமையில் நடத்த உத்தரவு
ஹாசனில் சித்து ஆதரவாளர்கள் மாநாடு சிவகுமார் தலைமையில் நடத்த உத்தரவு
ADDED : டிச 02, 2024 04:34 AM

பெங்களூரு : ''ஹாசனில் சித்தராமையாவுக்கு ஆதரவாக நடக்கும் மாநாடு, என் தலைமையில் நடத்தப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் அறிவித்து உள்ளார்.
'முடா' வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் சித்தராமையா, தனது பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு காட்டும் வகையில், வரும் 5ம் தேதி அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மாநாட்டை நடத்த நினைத்திருந்தார். இதற்கான பொறுப்பை அமைச்சர்கள் மஹாதேவப்பா, ராஜண்ணா ஆகியோரிடம் ஒப்படைத்து இருந்தார்.
சித்தராமையாவின் ஆதரவாளர்கள் சார்பில் இம்மாநாடு நடத்தப்படும் என்று முதலில் கூறப்பட்டது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை.
கட்சி தலைமையே மாநாட்டை நடத்த வேண்டும் என்று மேலிடத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, சித்தராமையா ஆதரவாளர்கள இணைந்து மாநாடு நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநாடு தொடர்பாக பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பழைய மைசூரு பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுடன், துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் முதல்வர். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அவர் முதல்வர் பதவியில் இல்லை. நாங்கள் ஒரே கட்சி கொடியை பயன்படுத்துகிறோம்.
ஹாசன் மாநாட்டை கட்சிக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று, மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைத்தேன். எனது தலைமையில் மாநாட்டை நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். வரும் நாட்களில் மாநிலம் முழுதும் மாநாடுகள் நடத்தப்படும்.
முஸ்லிம் ஓட்டு உரிமை குறித்து மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் பேசியது தவறு. சட்டத்திற்கு உட்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது. ம.ஜ.த., ஆட்சிக் காலத்தில் மடாதிபதி நிர்மலானந்த சுவாமிகளின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டது.
இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் சந்திரசேகர சுவாமிகள் விஷயத்தில் அரசியல் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டின் மூலம் சித்தராமையா, தன் செல்வாக்கை காண்பித்து, முதல்வர் பதவியை தக்க வைத்து விடலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால், அவரது கனவில் மண் அள்ளி போடும் விதமாக, 'என் தலைமையில் மாநாடு நடக்கும்' என்று சிவகுமார் கூறியுள்ளார்.