ஏர் இந்தியா விமானத்துக்கு பகிரங்க மிரட்டல்; எல்லை மீறும் பயங்கரவாதிக்கு ஆதரவு தருவது யார்?
ஏர் இந்தியா விமானத்துக்கு பகிரங்க மிரட்டல்; எல்லை மீறும் பயங்கரவாதிக்கு ஆதரவு தருவது யார்?
UPDATED : அக் 21, 2024 12:42 PM
ADDED : அக் 21, 2024 12:34 PM

புதுடில்லி: நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தானி தீவிரவாதி பன்னுன் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கேட்கும் பிரிவினைவாதிகள், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். இவர்கள், இந்தியாவுக்கு எதிராக பேசுவதையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் அந்நாட்டு அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால் இவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிப்போகிறது.
குறிப்பாக, கனடாவில் சீக்கியர்கள் ஓட்டு வங்கியாக மாறியுள்ள நிலையில், அவர்களது ஓட்டுக்களை பெறுவதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இந்நிலையில்தான், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான். நவம்பர் 1 முதல் 19ம் வரையில் பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என்ற அவனது மிரட்டல் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சீக்கியர்களின் இனப்படுகொலையின் 40ம் ஆண்டு நினைவு தினம் அடுத்த வாரம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்ட குர்பத்வந்த் சிங் பன்னுன், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், அதுவரையில் விமான நிலையத்தை மூட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தான்.
அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மற்றும் அம்மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் ஆகியோரை ஜனவரி 26ல் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

