மடங்களுக்கு வெள்ளி பொருட்கள்; வேட்புமனுவில் குறிப்பிடாதது ஏன்?
மடங்களுக்கு வெள்ளி பொருட்கள்; வேட்புமனுவில் குறிப்பிடாதது ஏன்?
ADDED : நவ 01, 2024 11:18 PM

பல்லாரி ; மடங்களுக்கு வெள்ளி பொருட்கள் காணிக்கை அளித்த, சண்டூர் பா.ஜ., வேட்பாளர் பங்காரு ஹனுமந்து, நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
பல்லாரியின், சண்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் துக்காராம். நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சண்டூர் சட்டசபை தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
பா.ஜ., வேட்பாளராக பங்காரு ஹனுமந்து, காங்கிரஸ் சார்பில் துக்காராமின் மனைவி அன்னபூர்ணா களமிறங்கிஉள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்ததுடன், அவர் பல்லாரிக்கு வர, நீதிமன்றம் விதித்திருந்த தடை நீங்கியது, பங்காரு ஹனுமந்துவுக்கு பலம் அளித்துள்ளது. உற்சாகத்துடன் தொகுதியை சுற்றி வந்து, பிரசாரம் செய்கிறார்.
இதற்கிடையே அவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். வால்மீகி மடம் மற்றும் பஞ்சமசாலி மடத்துக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி சிம்மாசனத்தை, காணிக்கையாக வழங்கியிருந்தார். இந்த விஷயத்தை, அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, தேர்தல் ஆணையத்தில் சமூக ஆர்வலர் ராகவேந்திரா பூஜாரி என்பவர், புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் சண்டூர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய இணை தலைமை அதிகாரி யோகேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார்.
புகாரில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.