ADDED : செப் 25, 2025 02:38 AM
மிர்சாபூர்:ஹிந்து கடவுள் துர்கா தேவியை அவமதிக்கும் வகையில் ஒரு பாடலை, 'யு - டியூப்' சேனலில் பதிவேற்றியதாக நாட்டுப்புற பாடகி சரோஜ் சர்கம் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் கர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் சர்கம். நாட்டுப்புற பாடகி. இவரது கணவர் ராம் மிலன் பிந்த்.
இருவரும் சேர்ந்து, ஹிந்து கடவுள் துர்கா தேவியை அவமதிக்கும் விதமாக ஒரு பாடலை தயாரித்து, கடந்த 19ம் தேதி தங்களது யு-டியூப் சேனலில் -பதிவேற்றினர். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்குரிய வீடியோவால் ஹிந்து மதத்து தலைவர்கள் வெகுண்டு எழுந்தனர். இருவரையும் கைது செய்யக் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கா விட்டால் துறவியர் தெருக்களில் இறங்கி போராடுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது .
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதிஹான் போலீசார், இருவரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
மிர்சாபூர் எஸ்.பி., சோமன் பர்மா கூறுகையில், “இந்த வீடியோ குறித்து தீவிர விசாரணை நடத்த சைபர் கிரைம் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வீடியோவை சரோஜ் சர்கம் மற்றும் அவரது கணவர் ராம் மிலன் பிந்த் ஆகிய இருவரும் தயாரித்து பதிவேற்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருவரிடமும் விசாரணை நடக்கிறது,”என்றார்.
சரோஜ் சர்கமின் யு-டியூப் சேனலுக்குக் 60,000 சந்தாதாரர்கள் இருப்பதாகவும், இதுவரை 3,5-40 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் போலீசார் கூறினர்.