ADDED : செப் 25, 2025 02:36 AM
மீரட்:உ.பி., மாநிலம் மீரட் லோஹியா நகரில் வசிக்கும், 38 வயது நர்ஸ் நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு பணிக்குச் செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் இருந்து ஒரு இளைஞர், நர்ஸ் மீது ஆசிட்டை வீசி விட்டு தப்பி ஓடினார். பொதுமக்கள் நர்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி செய்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த நர்சுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் கட்டுமானத் தொழிலாளி. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மீரட் எஸ்.பி., விபின் தடா கூறுகையில், “நர்சுக்கு கைகளில் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். சம்பவ இடத்தில் இருந்தவர் களிடமும் விசாரித்து வருகிறோம்,”என்றார்.