UPDATED : டிச 09, 2025 01:48 PM
ADDED : டிச 09, 2025 08:14 AM

புதுடில்லி: தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் பார்லிமெண்டில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. பாஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி நடத்தி வருகிறது. பீஹாரை தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா என பல மாநிலங்களில் இந்த எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. டிச.1ம் தேதி பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய போது இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக் குரலை எழுப்பின.
எதிர்க்கட்சிகளின் தொடர் இடையூறுகளால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட, பார்லிமெண்டை சுமூகமாக நடத்துவது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது டிச.9ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக எஸ்ஐஆர் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று லோக்சபாவில் எஸ்ஐஆர் விவாதம் தொடங்கியது. மொத்தம் 10 மணி நேரம் அவையில் விவாதம் நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்குழுவை மாற்றணும்
முதலில் பேசிய காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, ''நாட்டின் மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தம் என்பது ராஜிவ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அவர் தான் ஓட்டளிக்கும் வயதை 21ல் இருந்து 18 ஆக குறைத்தார். இங்கு பேசிய பல உறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை பற்றி கேள்வி எழுப்பும் துரதிர்ஷ்டமான சூழல் உள்ளது,'' என்றார்.தொடர்ந்து பேசிய மணீஷ் திவாரி, ''தேர்தல் ஆணையம் என்பது நடுநிலை அம்பயர் ஆக செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இப்போது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை பற்றி கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்துள்ளனர்.''எனவே தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பான சட்டத்தை முதலில் திருத்த வேண்டும். தேர்வுக்குழுவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும். பல மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இதை செய்வதற்கு சட்டபூர்வமான நியாயம் எதுவும் இல்லை,'' என்றார்.
உண்மையான ஓட்டுத்திருட்டு
பாஜ எம்பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் பேசுகையில், ''உண்மையான ஓட்டுத்திருட்டு என்பது 1947ம் ஆண்டு நடந்தது தான். ஒட்டு மொத்த காங்கிரஸ் செயற்குழுவும், சர்தார் வல்லபாய் படேல் பின்னால் இருந்த நிலையில், ஜவகர்லால் நேரு பிரதமர் ஆக்கப்பட்டது தான் ஓட்டுத்திருட்டுக்கு உதாரணம்,'' என்றார்.
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேசுகையில், ''எஸ்ஐஆர் பிரச்னையில் இதுவரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள் பேச உள்ளனர். எதிர்க்கட்சிகளின் விவாதங்களைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாளை(டிச.10) பதில் அளித்து பேசுவார்.

