எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு
எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு
UPDATED : டிச 11, 2025 05:10 PM
ADDED : டிச 11, 2025 05:01 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை டிச.,14 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற, வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை இன்று ( டிச.,11) வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகம், குஜராத், மபி, சத்தீஸ்கர், உபி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் எஸ்ஐஆர் பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க வரும் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.,19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

