ADDED : டிச 17, 2024 11:51 PM

பெங்களூரு; பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை கொல்ல முயற்சித்த தந்தையை, தாய்மாமன்கள் கத்தியால் குத்திக் கொன்றனர்.
பெங்களூரு சித்தாபூரைச் சேர்ந்தவர் சல்மான்கான், 29. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வீட்டை கவனித்துக் கொள்கிறார். குடிக்கு அடிமையான சல்மான்கான், தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. வழக்கம்போல் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவியிடம் சல்மான்கான் தகராறு செய்தார்.
பொறுமை இழந்த மனைவி, போலீசின் 112 என்ற எண்ணுக்கு போன் செய்தார். இதை பார்த்து பயந்த சல்மான் கான், அங்கிருந்து சென்றுவிட்டார். அங்கு வந்த போலீசார், சல்மான் கான் வந்தவுடன், போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டுச் சென்றனர்.
நேற்று காலை வீட்டுக்கு வந்த சல்மான் கான், “இனி போலீசுக்கு தகவல் தெரிவித்தால், இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துவிடுவேன்,” என மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன மனைவி, தனது சகோதரர்கள் உமர், சோஹிப், அன்வர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்ததும், மனைவியிடம் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு, கத்தியால், குழந்தையை குத்தி கொன்று விடுவதாக சல்மான்கான் மிரட்டினார்.
இதனால் பதறிய சகோதரர்கள், கீழே கிடந்த மரக்கட்டையால் சல்மான் கானின் கையில் அடித்தனர்.
குழந்தையை அவரிடம் இருந்து பறித்து, சகோதரியிடம் ஒப்படைத்தனர். கீழே விழுந்த கத்தியால், சல்மான் கானை சரமாரியாக குத்தினர்.
படுகாயம் அடைந்த அவரை, நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சல்மான் கான் மீது ஏற்கனவே, ஆறு குற்ற வழக்குகள் உள்ளன. சல்மான் கானை கொன்ற மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.