ADDED : ஆக 09, 2025 03:47 AM

சென்னை: மூன்று ஆண்டுகளில், முன்விரோதம் காரணமாக, 475 கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கான காரணங்களில், முதல் மூன்று இடங்களில், குடும்ப தகராறு, வாய் தகராறு மற்றும் முன்விரோதம் ஆகியவை உள்ளன.
அந்த வகையில், முன்விரோதம் காரணமாக மூன்று ஆண்டுகளில், 475 கொலைகள் நடந்துள்ளதாக, போலீஸ் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது, போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுப்பது இல்லை. விசாரணை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, முன்விரோத கொலைகள் அதிகரித்து வருகின்றன. பிரச்னைகளை தீர்த்து வைப்பதில், போலீஸ் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. சட்ட ரீதியாக நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
குற்றம் செய்தவர் தண்டிக்கப்படும்போது, எதிர் தரப்பினர் மீது கோபம் கொள்வது இயல்பு. இந்த பகை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, போலீசாருக்கு உள்ளது. காவல் நிலையங்களுக்கு வருவோரின் பிரச்னைகளை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுத்தாலே, 50 சதவீத முன்விரோத தகராறுகள் குறைந்து விடும்.
முன்விரோதம் காரணமாக, பழிக்கு பழி வாங்க துடிப்போரை ரகசியமாக கண்காணித்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இத்தகையை கொலைகள் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

