வக்கீல் ஜீவா தற்கொலை வழக்கு எஸ்.ஐ.டி., விசாரிக்க உத்தரவு
வக்கீல் ஜீவா தற்கொலை வழக்கு எஸ்.ஐ.டி., விசாரிக்க உத்தரவு
ADDED : டிச 05, 2024 07:15 AM
பெங்களூரு: போவி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பான விசாரணையின்போது, பெண் வக்கீல் ஜீவா தற்கொலை செய்த வழக்கை எஸ்.ஐ.டி., விசாரிக்க, உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் 97 கோடி ரூபாய் முறைகேடு பற்றி சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக பெண் தொழில் முனைவோரும், வக்கீலுமான ஜீவா, 34, என்பவரும் விசாரணைக்கு வளையத்துக்குள் இருந்தார்.
விசாரணையின்போது டி.எஸ்.பி., கனகலட்சுமி, தன் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜீவா துாக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர். ஜீவா தற்கொலை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பெங்களூரு வக்கீல்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்தார்.
நேற்று நடந்த விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் ஜீவா தற்கொலை வழக்கை சி.சி.பி.,க்கு பதிலாக எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.