'சித்தராமையா நம்பர் ஒன் பொய்யர்' பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் கோபம்
'சித்தராமையா நம்பர் ஒன் பொய்யர்' பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் கோபம்
ADDED : மார் 08, 2024 11:04 PM

ராய்ச்சூர்: ''முதல்வர் சித்தராமையா நம்பர் ஒன் பொய்யர். மத்திய அரசை விமர்சிப்பதே மாநில காங்கிரஸ் அரசின் செயல் திட்டமாக உள்ளது,'' என, மேலவை எதிர்க்கட்சி தலைமை கொறடா ரவிகுமார் தெரிவித்தார்.
ராய்ச்சூரில் அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கியும், நிவாரணம் வழங்கவில்லை என, மாநில அரசு பொய் கூறுகிறது. இதுவரை 5,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக மாநிலத்துக்கு வந்துள்ளது.
முதல்வர் சித்தராமையா நம்பர் ஒன் பொய்யர். மத்திய அரசை விமர்சிப்பதே மாநில காங்கிரஸ் அரசின் செயல் திட்டமாக உள்ளது.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கு மட்டும் காலம் கடத்தும் அரசு, விவசாயிகள் மற்றும் மாநில மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளது.
மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதை சமாளிக்க மாநில அரசு, முற்றிலும் தவறிவிட்டது. விவசாயிகளின் பிரச்னையை விட, வாக்குறுதி திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
மாவட்ட பொறுப்பு அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் வறட்சி சுற்றுப்பயணம் செய்யவில்லை. மாநிலத்தில் 29,000 கிராமங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தால், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
கடும் வறட்சி சூழலிலும், காங்கிரஸ் அரசு, தன் அமைச்சர்களுக்கு 34 புதிய இன்னோவா கார்களை வாங்கியுள்ளது. முதல்வர் சித்தராமையா, 6 லட்சம் ரூபாய் செலவழித்து, வீட்டை புதுப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.

