மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரை சந்திக்கிறார் சிவா
மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரை சந்திக்கிறார் சிவா
ADDED : பிப் 20, 2025 06:38 AM

மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை டில்லியில் வரும் 25ம் தேதி கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சந்திக்க உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், மாநில நீர்வள அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று முடிந்தது. இரண்டாவது ஆண்டாக இரண்டு நாட்கள் நடந்தது.
'2047ம் ஆண்டில் நீர் வளமான நாடாக இந்தியா' என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரும் கலந்து கொண்டு, கர்நாடகாவின் நீர்பாசன திட்டங்கள் குறித்து பேசினார்.
அங்கு நேற்று அவர் அளித்த பேட்டி:
மகதாயி, மேகதாது, கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்து விவாதிக்க, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் நேரம் கேட்டிருந்தேன். வரும் 25ம் தேதி டில்லி வந்து சந்திக்கும்படி கூறி உள்ளார்.
அன்றைய தினம் டில்லி சென்று கர்நாடக நீர்ப்பாசன திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உள்ளேன். எங்கள் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த மாநாடு அனைத்து மாநில நீர்ப்பாசன அமைச்சர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் மாநிலங்களில் உள்ள, நீர்ப்பாசன பிரச்னைகளை ஜல்சக்தி துறை முன் வைக்கலாம்.
தண்ணீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் என்பது இந்த மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டில் வைத்து ஆந்திரா, தெலுங்கானா மாநில அமைச்சர்களுடன் நான் விவாதித்தேன். துங்கபத்ரா அணையின் 30 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க, ஆந்திராவின் விஜயவாடாவுக்கு செல்வேன்.
இதற்கான மூன்று மாநிலங்களுக்கும் இணைந்து உத்தியை வகுக்க வேண்டும். நாட்டில் நீர்ப்பாசனம் முக்கிய துறையாகும். விவசாயிகள், தொழில்கள், குடிநீர், நகரமயமாக்கலுக்கு நீர்ப்பாசன திட்டம் மிகவும் அவசியம். நீர்ப்பாசன திட்டங்களுக்கு எப்போதும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

