பண மோசடி வழக்கு ரத்து சிவகுமார் நிம்மதி பெருமூச்சு
பண மோசடி வழக்கு ரத்து சிவகுமார் நிம்மதி பெருமூச்சு
ADDED : மார் 06, 2024 12:54 AM
புதுடில்லி, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிரான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில காங்., தலைவரான சிவகுமார், துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.
சோதனை
கடந்த 2017 ஆகஸ்டில், டில்லியில் உள்ள சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத, 8.59 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, 2018ல், அமலாக்கத் துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், 2019 செப்டம்பரில், சிவகுமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
எனினும் அடுத்த மாதமே, அவருக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தன் மீதான சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி, 2019ல், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சிவகுமார் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
உத்தரவு
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிவகுமார் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிவகுமார் மீதான அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

