ADDED : மார் 12, 2024 03:14 AM
பெங்களூரு: பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷின் வெற்றிக்காக, 'ஆப்பரேஷன் கை' நடத்த துணை முதல்வர் சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு கர்நாடக காங்கிரஸ் சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் இவரது சகோதரரும், துணை முதல்வருமான சிவகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பது, கூட்டணிக் கட்சிகளின் எண்ணமாகும்.
பெங்களூரு நகரின் மூன்று சட்டசபை தொகுதிகள், துமகூரின் குனிகல், ராம்நகரின் நான்கு சட்டசபை தொகுதிகள், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ளன. இவற்றில் ஐந்து சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
எனினும் மோடி அலை இருப்பதால், சுரேஷின் வெற்றி எளிதாக இருக்காது என்பதை உணர்ந்துள்ள சிவகுமார், தொகுதியின் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை ஈர்க்க 'ஆப்பரேஷன் கை' நடத்த முயற்சி செய்து வருகிறார்.
ராம்நகர், சென்னபட்டணா, மாகடியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். சென்னபட்டணா பா.ஜ., பிரமுகர் மலவேகவுடா, காங்கிரசில் இணைந்துள்ளார். மேலும் பல தலைவர்களுடன், திரைமறைவில் பேச்சு நடக்கிறது. இவர்களுடன் எம்.பி., சுரேஷும், மொபைல் போனில் பேசுகிறார். சிலர் இவரது வாக்குறுதிகளை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு தாவ சம்மதித்துள்ளனர்.
ஆனால் சிலர், என்ன பதவி கொடுத்தாலும், 'எங்கள் கட்சியை விட்டு விட்டு, காங்கிரசுக்கு வருவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என, கூறி விட்டதாகவும் தெரிகிறது.

