ADDED : பிப் 14, 2024 05:28 AM
சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் பா.ஜ.,வின் சீனிவாச பிரசாத். இதற்கு முன், காங்கிரஸ் சார்பில், நான்கு முறையும்; ஐக்கிய ஜனதா தளம் சார்பில், ஒரு முறையும் என மொத்தம் ஒரே தொகுதியில் ஆறு முறை எம்.பி.,யாக இருக்கிறார்.
இவருக்கு, 76 வயது ஆவதால், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியான சாம்ராஜ்நகர், காங்கிரஸ் கோட்டையாகும்.
தனிப்பட்ட செல்வாக்கு
சீனிவாச பிரசாத்தின் தனிப்பட்ட செல்வாக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அலை காரணமாக 2019ல் அவர் சுலபமாக வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளதால், தன் மருமகன் ஹர்ஷவர்தனுக்கு வாய்ப்பு வழங்கும்படி கட்சி மேலிடத்தில் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், 2023 சட்டசபை தேர்தல் முதல், சாம்ராஜ்நகரில் பா.ஜ., தலைவர்களிடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், தங்கள் கோட்டையை மீண்டும் கைப்பற்றும் வகையிலும், காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
களத்தில் சிவகுமார்
சாம்ராஜ்நகரை கைப்பற்ற, துணை முதல்வர் சிவகுமாரே நேரடியாக களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நெருக்கமாக இருக்கும், இரண்டு செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியல் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரிடம் யாருக்கு காங்., மேலிடம் அனுமதி அளிக்கிறதோ அவர் வெற்றி பெறுவார் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
அந்த பெயர்களை பகிரங்கப்படுத்தாமல், இருவரையும் கட்சி பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தியுள்ளார். யாருக்கு வேட்பாளர் ஆகும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.
எந்த காரணத்துக்கும் பா.ஜ., வெற்றி பெற கூடாது என்பதற்காக, சில செல்வாக்கு மிக்க பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை காங்கிரசுக்கு இழுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் தான், சாம்ராஜ்நகர் பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்க உள்ளது.

