கர்நாடகாவில் சோகம்; கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாப பலி
கர்நாடகாவில் சோகம்; கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாப பலி
ADDED : டிச 21, 2024 02:37 PM

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில், கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து துமகூரு நெடுஞ்சாலையில், நெலமங்களா என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி, அந்த கார் மீதே கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும், அருகில் பைக்கில் நின்று கொண்டு இருந்த ஒருவரும் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.