அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் விவேக் ராமசாமி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் விவேக் ராமசாமி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ADDED : நவ 08, 2025 10:00 AM

வாஷிங்டன்: குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய குடியரசுக் கட்சி கவர்னர் மைக் டிவைன் பதவிக்காலம் இரண்டாவது முறையாக முடிவடைய உள்ளது. அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவர். தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனவரி 11ம் தேதி, 2027ம் ஆண்டு பதவியேற்பார். அமெரிக்காவின் வழக்கத்தின் படி தேர்தலுக்கு ஒராண்டுக்கு முன்னதாகவே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
அந்தவகையில், குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஓஹியோ மாநிலத்தின் கவர்னராக விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.
விவேக்கை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் திறமை வாய்ந்தவர். அவர் இளம் தலைமுறை மற்றும் மிகவும் புத்திசாலி.
விவேக் ராமசாமி ஒரு நல்ல மனிதர், அவர் நம் நாட்டை உண்மையிலேயே நேசிக்கிறார். உங்கள் அடுத்த கவர்னராக, விவேக் ராமசாமி பொருளாதாரத்தை வளர்க்கவும், வரிகள் மற்றும் விதிமுறைகளைக் குறைக்கவும், புலம் பெயர்ந்தோர் குற்றங்களை நிறுத்தவும், நமது ராணுவத்தை வலுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் அயராது போராடுவார்.
விவேக் ராமசாமி ஓஹியோவின் சிறந்த கவர்னராக இருப்பார். மேலும் எனது முழுமையான ஒப்புதலைப் பெறுவார். அவர் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
யார் இந்த விவேக் ராமசாமி?
* கேரளாவை பூர்விகமாக கொண்ட தமிழர் விவேக் ராமசாமி. இவருக்கு வயது 40.
* இவரது பெற்றோர், கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் சின்சினாட்டியில் குடியேறினர்.
* இவர் ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.
* குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.
* விவேக் ராமசாமி தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் அபூர்வா திவாரியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

