ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஆறு நக்சல்கள் சுட்டுக்கொலை
ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஆறு நக்சல்கள் சுட்டுக்கொலை
ADDED : நவ 14, 2025 01:24 AM

பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்ட வனப் பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 27 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவையொட்டிய வனப்பகுதியில் நக்சல் அமைப்பின் சிறப்பு மண்டல குழு உறுப்பினர் பாபா ராவ், அவரது மனைவியும் டிவிஷனல் குழு உறுப்பினருமான ஊர்மிளா உள்ளிட்ட, 60 நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆகியோர் கன்டுல்நர் மற்றும் கச்லாரம் கிராமத்தையொட்டிய பகுதியில் கடந்த 11ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த என்கவுன்டரில் நக்சல்கள் ஊர்மிளா, புச்சன்னா ஆகிய இருவர் உட்பட ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர்; மற்ற நக்சல்கள் தப்பியோடினர்.
இதில் புச்சன்னா, பாதுகாப்பு படையினரை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஊர்மிளா மாவோயிஸ்ட்களின் மக்கள் விடுதலை கொரில்லா படைக்கு தளவாட பொருட்களை சப்ளை செய்தவர்.
தெற்கு பஸ்தார் பகுதியில் தீவிரமாக செயல்பட்ட புச்சன்னா, கிராம மக்கள் 20 பேரை கொன்றதுடன், 43 குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவரது தலைக்கு 8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஊர்மிளா தலைக்கும், 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர், அந்த பகுதியில் செயல்பட்ட தீவிர வன்முறை நக்சல் இயக்கமான பேம்டு குழு செயலராக இருந்தார்.
இது தவிர, ஜகத் தமோ தலைக்கு 5 லட்சம் ரூபாயும், படைப்பிரிவு உறுப்பினர்களான தேவ், பகத், மங்கிலி ஓயம் ஆகியோர் தலைக்கு தலா 2 லட்சம் என மொத்தம் 27 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக பிஜப்பூர் போலீஸ் எஸ்.பி., ஜிதேந்திரா யாதவ் தெரிவித்தார்.

