டில்லியில் தீவிரமடையும் காற்று மாசு; முகக்கவசம் போதாது என்கிறது சுப்ரீம் கோர்ட்
டில்லியில் தீவிரமடையும் காற்று மாசு; முகக்கவசம் போதாது என்கிறது சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 14, 2025 01:21 AM

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து மிகவும் தீவிரமடைந்து வருவதாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இதில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டும் போதாது என தெரிவித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வழக்கு விசாரணையில் ஆஜராகவும் அறிவுறுத்தியுள்ளது.
கடும் அவதி டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டுதோறும் அக்., - ஜன., வரை காற்று மாசு அபாய கட்டத்துக்குச் செல்லும். கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக டில்லிவாசிகள் கடும் அவதிப்படுவர்.
இந்த ஆண்டும், கடந்த மாத துவக்கத்தில் இருந்தே காற்று மாசு அதிகரித்து வருகிறது. இங்கு-, 10 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இந்தாண்டு நீக்கப்பட்டது.
தீபாவளியை ஒட்டி, இரு தினங்களுக்கு பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனால், காற்று மாசு மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. 200க்கு மேல் பதிவாகும் காற்று தரக்குறியீடு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், டில்லியின் பல பகுதிகளில் காற்று தரக்குறியீடு 400க்கும் மேல் நேற்று பதிவானது.
மத்தி ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, அதிகபட்சமாக பவானாவில் காற் று மாசு குறியீடு 460 ஆக நேற்று பதிவானது. ஆனந்த் விஹாரில், 431; சாந்தினி சவுக்கில் 455; ரோஹிணியில் 447 ஆகவும் பதிவானது.
குறைந்தபட்சமாக, என்.எஸ்.ஐ.டி., துவாரகாவில் காற்று மாசு குறியீடு, 216 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, ஆரோக்கியமாக உள்ளவர்களை கூட கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்டை மாநிலங்களில் பயிர் கழிவு எரிக்கப்படுவதும், டில்லியில் காற்று மாசு படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
நடவடிக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வழக்கறிஞர்கள் ஏன் நேரில் ஆஜராகிறீர்கள்? காற்று மாசு என்பது மிகவும் தீவிரமானது. அதை தவிர்க்க முகக்கவசம் மட்டும் போதாது. அதற்கும் மேலான நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம்.
காற்று மாசு, நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். வழக்குகளில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்கும் முறை நம்மிடம் அமலில் உள்ள நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசடைவதற்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
பயிர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான தரவுகளை, இரு மாநில அரசுகளும் ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இரு மாநிலம் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

