ADDED : செப் 21, 2024 11:19 PM
பெங்களூரு: பெஸ்காமில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமனக்கடிதம் கொடுத்து, மோசடி செய்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரின் ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் லிகித் கவுடா, 28. இவருக்கு 2021ல் விக்னேஷ் ஹெக்டே, 44, என்பவர் அறிமுகமானார். லிகித் கவுடா பெஸ்காம் மற்றும் கே.பி.டி.சி.எல்.,லில் வேலை தேடி வந்தார்.
இதை அறிந்த விக்னேஷ் ஹெக்டே, “எனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக வேலை வாங்கித் தருகிறேன்,” என கூறினார். தன் கூட்டாளிகள் பிரவீன், 30, வெங்கடேஷ், 44, சிவானந்த், 63, சீனிவாஸ், 29, ராஜா, 42, ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், “23 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை கிடைக்கும்,” என, ஆசை காண்பித்தார்.
இதை நம்பிய லிகித் கவுடா, 2023ல் பணம் கொடுத்தார். அதன்பின் போலியான பணி நியமனக்கடிதம் கொடுத்தனர். அது போலியானது என, தெரிந்து கொண்ட அவர், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார்.
பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் மிரட்டினர். இதுகுறித்து ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில், லிகித் கவுடா புகார் செய்தார். ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.