ADDED : டிச 12, 2024 02:14 AM
மாண்டியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல், முழு அரசு மரியாதையுடன் சொந்த கிராமமான சோமனஹள்ளியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, நேற்று முன்தினம் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பெங்களூரில் காலமானார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கர்நாடக முதல்வர் மற்றும் மஹாராஷ்டிர கவர்னர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பின், 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து சொந்த ஊரான சோமனஹள்ளிக்கு அவரது உடல் நேற்று எடுத்து செல்லப்பட்டது.
மனைவி பிரேமா, மகள்கள் மாளவிகா, சாம்பவி ஆகியோர் கிருஷ்ணா உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்; தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, சோமனஹள்ளியில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
அப்போது, துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் கிருஷ்ணா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின், 1,000 கிலோ சந்தன கட்டைகள் அடுக்கப்பட்டு, மேலே உடல் வைக்கப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கிருஷ்ணா உடலுக்கு அவரது பேரன் அமர்தியா தீ மூட்டினார்.
இறுதிச் சடங்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும், கிருஷ்ணாவின் உறவினருமான சிவகுமார், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பா.ஜ., பிரமுகர்கள், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.