வந்தாச்சு தீபாவளி கொண்டாட்டம்; பட்டாசு, துணிமணியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையும் அமோகம்!
வந்தாச்சு தீபாவளி கொண்டாட்டம்; பட்டாசு, துணிமணியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையும் அமோகம்!
UPDATED : அக் 28, 2024 10:41 AM
ADDED : அக் 28, 2024 08:43 AM

புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்மார்ட்போன்கள் விற்பனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்.,31ல் கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள், பட்டாசு, தங்க நகைகள், ஆடைகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். டில்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் கோல்கட்டா போன்ற முக்கிய பெருநகரங்களில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தது என்கின்றனர் வணிகர்கள்.
இது குறித்து சில்லறை விற்பனையாளர் (retailer) கூறியதாவது: தசராவில் இருந்து ஆப்லைன் விற்பனை சூடுபிடித்தது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தற்போது விற்பனை புதிய உச்சத்தை அடைந்தது. ஆப்லைன் விற்பனை 60 சதவீதமாக அதிகரித்தது என்றார். 'வழக்கமான விற்பனை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, பண்டிகை கால விற்பனை நல்ல உயர்வை கண்டுள்ளது' என ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.
'அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வணிக சந்தை நிறுவனங்கள் குறிப்பாக சாம்சங் மற்றும் ஆப்பிளின் பழைய மாடல்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன. மொபைல் போன் நிறுவனங்கள் தங்கள் விற்பனை இலக்குகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிக டிரெண்டிங்கில் உள்ள பிராண்டு நிறுவனங்கள் தங்களது மொபைல் போன்களின் சராசரி விலையை ரூ. ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது' என்கின்றனர் வணிகத்தை கணித்து சொல்லும் ஆய்வாளர்கள்.
ஆல் இந்தியா மொபைல் ரீடெய்லர்ஸ் அசோசியாவின் நிறுவனர் தலைவர் லக்யானி கூறியதாவது: சாம்சங், விவோ மற்றும் ஆப்பிள் ஆகியவற்றின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தேவை உள்ளது. அதே நேரத்தில் Xiaomi 5G ஸ்மார்ட்போன்களுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. கவர்ச்சிகரமான சலுகைகள், இலவசங்கள் மற்றும் ரொக்கத் தள்ளுபடி காரணமாக இந்த சீசனில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.