ADDED : ஆக 23, 2026 04:24 AM

புதுடில்லி: காங்கிரசின் கோட்டை என கருதப்பட்ட, உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், 2019 லோக்சபா தேர்தலில், அக்கட்சியைச் சேர்ந்த ராகுலை, 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். ஆனால், 2024ல் அமேதி தொகுதியில் வேறொரு காங்., வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதன்பின், இவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்; முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதிக்கு தேசிய பொதுச்செயலர் பதவி வழங்கியுள்ளார். மொத்தமுள்ள எட்டு தேசிய செயலர்களில், ஸ்மிருதி மட்டுமே பெண். அடுத்தாண்டில் பிப்ரவரியில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கூடுதலாக ஸ்மிருதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவம்பரில், உ.பி.,யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்த பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இதில், பா.ஜ.,விற்கு எட்டு எம்.பி.,க்களும், சமாஜ்வாதி கட்சிக்கு இரு எம்.பி.,க்களும் கிடைக்கும். ஸ்மிருதியை ராஜ்யசபா எம்.பி.,யாக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
அடுத்த லோக்சபா தேர்தலில், இவரை களம் இறக்க கட்சி முடிவெடுத்து உள்ளதாம். அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் ஸ்மிருதி போட்டியிடுவார் என, சொல்லப்படுகிறது. 'இத்தனை நாள் யாருமே கண்டுகொள்ளாத இவருக்கு, ஏன் திடீரென கட்சி பாசம் காட்டுகிறது?' என, கட்சிக்குள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
