ADDED : மார் 18, 2024 11:50 PM

புதுடில்லி :இந்திய பெருங்கடல் பகுதியில், நம் கடற்படையினரிடம் சரணடைந்த சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் 35 பேர், விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியா அருகே மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்வி ரூயன் என்ற சரக்கு கப்பல் சென்றது.
இதை, சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடந்த ஆண்டு டிச., 14ல் கடத்தினர். அந்த கப்பலில் இருந்த 17 பணியாளர்களை சிறை பிடித்தனர். அதன் பின், கடற்கொள்ளையில் ஈடுபட அந்த கப்பலை பயன்படுத்தி வந்தனர். கடந்த 16ம் தேதி அந்த கப்பலை நம் கடற்படையினர் மடக்கினர். அப்போது, நம் கடற்படைக்கு சொந்தமான, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானத்தை கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தினர்.
மேலும் நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., கோல்கட்டா போர்க்கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை தொடர்ந்து 40 மணி நேரம் நடந்த சண்டையின் இறுதியில், அந்த கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த நம் வீரர்கள், கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர்.
கொள்ளையர்களின் பிடியில் இருந்த பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர்களை விடுவித்தனர்.
கைது செய்யப்பட்ட, சோமாலியா நாட்டை சேர்ந்த 35 கடற்கொள்ளையர்களை விசாரணைக்காக நம் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைகளின் போது, கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்ட பின், அவர்களால் மற்ற கப்பல்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்த பின், அவர்களை விடுவிப்பது வழக்கம்.
ஆனால், இவர்கள் நம் கடற்படை ட்ரோன் மற்றும் போர்க் கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், நம் வீரர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய காரணத்தால், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து, அவர்களை இந்தியா அழைத்து வந்துள்ளதாக நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.

