UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:14 PM
நிவாரண பொருள்
விழுந்து ஒருவர் பலி
பாட்னா: பீஹாரில் சரண் மாவட்டத்தின் பர்சுராம்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு, ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டது. அங்கு நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொட்டலம், அப்பகுதியில் நின்றிருந்த அனில் குமார் சிங் என்பவரின் தலை மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஹா.,வில் இருமுறை
லேசான நில அதிர்வு
மும்பை: மஹாராஷ்டிராவில் ஹிங்கோலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று சில மணி நேர இடைவெளியில் இருமுறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, முதல் நில அதிர்வு, நேற்று காலை 7:46 மணிக்கு, 3.3 ரிக்டர் அளவில் பதிவானது. கதாலா பகுதியில் பூமிக்கு அடியில், 7 கி.மீ., ஆழத்தில் பதிவானது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து, 4.5 ரிக்டர் அளவு கொண்ட சற்று வலுவான நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இதனால் எந்த உயிரிழப்போ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை.
பஸ் கவிழ்ந்து
4 பெண்கள் பலி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் விஹாராபாத் மாவட்டத்தின் கேசரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், அதே மாவட்டத்தின் சிந்தகுண்டா பகுதியில் நேற்று நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க தனியார் பஸ்சை வாடகைக்கு எடுத்துச் சென்றனர். 40 பேருடன் சென்ற அந்த பஸ், புறப்பட்ட சில நிமிடங்களில், எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில், நான்கு பெண்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு, பிரேக் பழுதானதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கவுன்சிலர் பதவியை ராஜினாமா
செய்தார் ஓய்வு டி.ஜி.பி.,
திருவனந்தபுரம்: கேரளாவின் ஓய்வுபெற்ற டி.ஜி.பி.,யும் மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான ஆர்.ஸ்ரீலேகா, பா.ஜ., சார்பில் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில், சாஸ்தாமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனிப்பட்ட சிரமங்களை காரணமாக குறிப்பிட்டு, தன் மாநகராட்சி கவுன்சிலர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மேயர் பதவிக்கான பா.ஜ., வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டும், அப்பதவி தனக்கு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
