சொத்துக்காக மருமகன் போட்ட பலே திட்டம்; ஆந்திராவில் பார்சலில் வீட்டுக்கு வந்த உடல்
சொத்துக்காக மருமகன் போட்ட பலே திட்டம்; ஆந்திராவில் பார்சலில் வீட்டுக்கு வந்த உடல்
UPDATED : டிச 29, 2024 03:27 AM
ADDED : டிச 29, 2024 03:25 AM

அமராவதி: ஆந்திராவில், ஒருவரின் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் மரப்பெட்டியில் வந்த பார்சலில், சடலம் ஒன்று இருந்தது. இந்த வழக்கை துப்பு துலக்கிய போலீசார், மாமனாரை மிரட்டி சொத்தை அபகரிப்பதற்காக, மருமகனே ஒருவரை கொலை செய்து பார்சலில் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசில் புகார்
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், எண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜு, 60. இவர், தன் மனைவி ஹேமாவதி மற்றும் மூத்த மகள் துளசியுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு, மரப்பெட்டி பார்சல் கடந்த 19ம் தேதி வந்தது.
அதை, ரங்கராஜுவின் மனைவி திறந்து பார்த்த போது, சடலம் ஒன்று இருந்தது.
அத்துடன் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுஇருந்தது.
அதில், 1 கோடி ரூபாய் தரவில்லை என்றால், இந்த நபரை கொன்றது நீங்கள் தான் என கூறுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கணவர் மற்றும் மகளுக்கு தகவல் தந்தார். மகள் துளசி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில், ரங்கராஜுவின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது இளைய மகளுடன் சேர்ந்து, மருமகன் இந்த சதி திட்டம் தீட்டியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரங்கராஜுவின் இளைய மகள் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா, இருவருக்கும் உதவிய சுஷ்மா ஆகிய மூவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி., அத்னன் நயீம் அஸ்மி கூறியதாவது:
ரங்கராஜுவிற்கு துளசி, ரேவதி என இரு மகள்கள். துளசியின் கணவரை 2012ல் இருந்து காணவில்லை. அதனால் அவர் தன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இரு மகள்களுக்கும் தலா அரை ஏக்கர் விவசாய நிலத்தை பகிர்ந்தளித்தவர், தன் வசம் 1.4 ஏக்கர் நிலத்தையும், வசித்து வரும் வீட்டை மனைவி பெயரிலும் உயில் எழுதியுள்ளார்.
மின்சார பொருட்கள்
இந்த சொத்தின் மீது அவரது இளைய மகள் ரேவதியும், மருமகன் ஸ்ரீதரும் கண் வைத்துள்ளனர். இதற்கிடையே, அவரது மூத்த மகள் துளசி தனியாக வீடு ஒன்றை கட்டத் துவங்கினார்.
அப்போது ரேவதி, ஸ்ரீதரின் குடும்ப நண்பரான சுஷ்மா, துளசியை தொடர்பு கொண்டு தொண்டு நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி, வீட்டிற்கு தேவையான மின்சார பொருட்களை இலவசமாக அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். ரங்கராஜு வீட்டிற்கு கடந்த 19ம் தேதி மரப்பெட்டியில் பார்சல் வந்துள்ளது.
மின்சார பொருட்கள் வந்துள்ளதாக நினைத்து பெட்டியை திறந்து பார்த்த போது, இறந்து போனவரின் உடல் இருந்தது. அத்துடன் இருந்த கடிதத்தில், 1 கோடி ரூபாய் தரும்படி மிரட்டியிருந்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார் ராஜு. அங்கு வந்த மருமகன் ஸ்ரீதர், சொத்து பத்திரங்களை தந்தால் பணத்தை ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
இந்த யோசனையை ஏற்க மறுத்த ராஜுவின் மூத்த மகள் துளசி, போலீசுக்கு தகவல் தந்தார்.
விசாரணையில், சதி திட்டம் தீட்டியதே ராஜுவின் மருமகன் ஸ்ரீதர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதற்காக ஆதரவற்ற கூலித் தொழிலாளியான பரலய்யா, 47, என்பவரை தோட்ட வேலை இருப்பதாக அழைத்துச் சென்று கொலை செய்து, அவரது உடலை பார்சலில் அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இதற்கு அவரது மனைவி ரேவதி, தோழி சுஷ்மா ஆகியோர் உதவியுள்ளனர். தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.